Print
Category: கட்டுரை
Hits: 2469

தொழில் என்பது பொருளாதார மேம்பாட்டிற்கு என்ற குறிக்கோளுடன் செயற்படும் இக்காலகட்டத்தில், அதையே ஒரு தொண்டாக நினைத்து ஆசிரியர்களாகத் தொழில் புரிந்து மாணவர்கள் மனதில் அளியாத இடம்பிடித்தவர்கள் எமது ஊர் ஆசிரியப்பெருந்தகைகள். அறிவு என்னும் பசிக்கு உணவளிக்க எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒருவராவது ஆசிரியக்கலையில் திறமைபெற்று விளங்கினார்கள்.

தடியும் தண்டணையுமாகக் காலைமுதல் மாலைவரை காட்சியளித்த ஆசிரியர்கள் மத்தியில் இனிப்பும் அணைப்புமாகப் பாடம் போதித்தவர்கள் என்றும் மாணவர் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்றார்கள். பாடசாலை செல்ல மறுக்கும் பிள்ளைகளை தன் அன்பால் அரவணைத்து மாணவர் மனம் நிறைய அன்புடன் கல்வி புகட்டியவர் திருமதி பர்வதம் தம்பிப்பிள்ளை அவர்கள். கணவரும் மனைவியுமாக ஒரே தொழில் புரிந்தாலும் இளைப்பாறிய பின்பும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு நடாத்தி விளித்திருக்கும் நேரம் முழுவதையும் போதனையில் செலவிட்டவர்கள். கல்வியுடன் நிற்காது இறைவழிபாட்டையும் போதித்து நன்னெறி புகட்டியவர்கள். 

நேரம் தவறாது ஒங்கி ஒலிக்கும் எம் ஊர் ஆலயமணிகளின் ஒசை கேட்டதும் எழுந்து நின்று “பார்வதி சமேத பரமெஸ்வராய கணபதேய முருகா நமோ நம” என்ற நாமத்தை உரத்துக் கூறவைத்து இறைவன் நாமத்தை மாணவர் மனங்களில் பதித்தவர்கள் இந்தப் பெரிய உள்ளங்கள். குழந்தைகள் மனதில் கல்வி எனும் விதையை எப்படி விதைக்க வேணும் என்று நன்கு அறிந்த பெருந்தகைகள் பல தலைமுறைக்கு தம் பணியாற்றியவர்கள். இவர்கள் பணியாற்றிய பாடசாலை என்பது இரும்புத் தூண்களால் கட்டப்பட் ஒரு கட்டிடம் மட்டுமல்ல, பல அறிவாளிகளை இவ்வுலகுக்குப் படைத்த சரணாலயம். 

வீணையைக்கையில் ஏந்தாத சரஸ்வதி (சுப்பிமணியம்) தமிழ் தந்த எங்கள் குரு, தன் நாவன்மையினால் தமிழை அமுதாக ஊட்டிய அந்த அன்னை என்றும் மாணவர் மனதில் இருந்து அகலாத இடம்பிடித்தவர், அவரின் பேச்சு, சிந்தனை எல்லாம் மாணவர்களின் கல்வியாகவே இருந்தது. அவர் கல்வியில் ஒரு போட்டியையே உருவாக்கியவர். தினமும் பரீட்சைக்குத் தயார் செய்வது போலவே பாடம் நடாத்தியவர்.

கணிதத்த்திற்கு ஒரு (சுப்பிர) மணியம், எங்கள் ஊருக்குக்கிடைத்த அதிஸ்ட்டம். குனிந்த புருவமும், பணிந்த நடையும், கனிவான பேச்சும், மாணவர்களை ஆட்கொண்ட விதமும், அவரை மற்றயவரிடம் இருந்து தனியே அடையாளப் படுத்திக் காட்டியது. கணிதத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டு தன்னிடம் கற்ற மாணவர்களுக்காக தன் நேரம், காலம் பாராது அயராது உளைத்த அந்த ஆசானுக்கு செய்யும் பிரதியுபகாரமாக அவர் மகள் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சையில் இலங்கையில் சிறந்த மாணவியாக மருத்துவத்துறைக்குத் தேரிவாகி தன் குடும்பத்திற்கு மட்டுமன்றி, எம் கிராமத்திற்கே பெருமை சேர்த்திருக்கின்றார். 

ஆங்கிலத்திற்கு ஒரு அருணாசலம், அவர் தமிழை செந்நடையுடன் பேசுபவர் ஆங்கிலத்தை காலை 5மணிக்கே கற்பிக்க ஆரம்பித்து விடுவார். இலக்கணத்திறமையுடன் ஆங்கிலத்தின் அருமையை மாணவர்களுக்கு உபதேசித்தவர் வீட்டில் காலையுலும் மாலையிலும் மாணவர்கள் தொகை நிறைந்தே இருக்கும். பல ஆசிரியர்கள் வாழும் நம் ஊரில் ஆங்கிலக் கல்விக்கு இவர் ஒருவரே நெடுங்காலம் பணியாற்றியவர். ஆங்கில அறிவுடன் பொது அறிவையும் போதிக்க ஆங்கிலப் பத்திரிகைகளை ஆதாரமாக வைத்துப் பாடம் நடாத்தியவர். வயதில் முதிமையடைந்திருந்தாலும்; பேச்சில் என்றும் இளமையுடன் காணப்படுபவர். இவர் விட்டு சென்று வெற்றிடத்தை நிரப்ப இன்னும் எவரும் எம் கிராமத்தில் வரவில்லை. 

பொருளியலுக்கு ஒரு கிருஸ்ணாநந்தன், வட பகுதியில் இவரையறியாத பொருளியல் கற்ற மாணவர்களே இல்லை எனும் அளவுக்கு புகழ் பெற்ற பயிற்றுவிப்பாளர். இவரிடம் கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் பலர். மணிக்கொரு இடம் எனச் சுற்றிச் சுழன்று பாடம் புகட்டிய இந்தப் புயல் திடீரென எம்மை விட்டுப் பிரிந்தது எம் மண்ணுக்கு மட்டுமல்லாமல் மாணவ சமுதாயம் முழுவதற்குமே பேரிழப்பு ஆகும். 

ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் ஊளியர்கள் மட்டுமல்ல பல மேதைகளை இவ் உலகிற்கு உருவாக்கும் சிற்பிகள்..

 

 ஆக்கம் : மகேசன் மைந்தன்