Print
Category: கட்டுரை
Hits: 2902

பழமையும் நல்லை நகர் நாவலர் பெருமான் கால் பதித்த புண்ணிய பூமியாகவும் விளங்கும் குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வெள்ளிக் கிழமை (25-12-2015) வெகு விமரிசையாக இடம்பெற்றது.

 

காலை -6 மணிக்கு விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை-8.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து முத்துமாரி அம்பாள் விநாயகப் பெருமான் ,வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் சகிதமாக முற்பகல் -10.30 மணிக்குத் திருத் தேரில் எழுந்தருளினார் .

அதனைத் தொடர்ந்து அடியார்கள் சிதறு தேங்காய் உடைத்ததைத் தொடர்ந்து முற்பகல் -11 மணிக்கு ,அடியவர்கள் அனைவரது நாவும் ஆரோகராக் கோஷத்தை உச்சரிக்க, விக்கினங்கள் தீர்க்கும் விநாயக் பெருமானின் இரதம் முன்னே செல்ல, ஆண் அடியவர்கள் ஒரு புறமும்,பெண் அடியவர்கள் மறு புறமும் வடம் தொட்டிழுக்க நடுவே அலங்கார சொருபினியான அம்பாளின் அழகிய இரதம் மெல்ல மெல்ல அசைந்தாடி வீதி வலம் வந்த காட்சி அற்புதமானது .பின்னே வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் தேரில் அருட்காட்சி தந்தார்.

நாதஸ்வர தவில் முழக்கங்கள் நாதவொலி பரப்ப பெண் அடியவர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும் ,அடியழித்தும் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர் .குறிப்பாக ஒரு வயதான பெண்மணி அலகு குத்திப் பாற்காவடி எடுத்த காட்சி அம்பாள் மீது கொண்ட பக்தியின் உச்சத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது எனலாம் .ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் ,பறவைக் காவடிகள் எடுத்தும் தம்முடைய நேர்த்திகளை பக்தி பூர்வமாக நிறைவேற்றினர் .அம்பாளைப் பஜனைப் பாக்களால் அர்ச்சிக்கும் அடியார் கூட்டத்தின் காட்சியும் பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது .முற்பகல்-11.45 மணிக்கு முத்தேர்களும் இருப்பிடத்தை அடைந்தன .

இவ்வாலயம் குரும்பசிட்டி மண்ணில் இருந்தாலும் அயலிலுள்ள குப்பிளான் மக்களின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய தெய்வமாக விளங்குவதுடன் , கேட்ட வரங்களையெல்லாம் வாரி வழங்கும் அன்னையாகவும் விளங்கி வருகிறாள் .ஒரு காலத்திலே குப்பிளான் கிராமத்துடன் இணைந்த கிராமமாகக் குரும்பசிட்டி கிராமம் காணப்பட்டதாகவும் ,இதனாலேயே குப்பிளான் மண்ணுக்கும் ,குரும்பசிட்டி மண்ணுக்கும் இன்று வரை நெருங்கிய தொடர்பு இருந்து வருவதாகவும் எமது கிராமத்தின் மூத்தவர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்று இடம்பெற்ற ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் கூடக் குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த பல அடியவர்கள் கலந்து கொண்டு உள்ளன்போடு அகிலாண்ட நாயகி அன்னை முத்துமாரி அம்பாளைத் தரிசித்தமையுடன் ,ஆலயத் தொண்டுகள் செய்தமையும் இதற்குத் தக்க சான்று.

இன்றைய தினம் இடம்பெற்ற ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் குரும்பசிட்டி ,குப்பிளான் ,ஏழாலை உட்பட யாழ்.குடாநாட்டின் பல்வேறு கிராமங்களிருந்தும் ,புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் நூற்றுக் கணக்கில் உள்ளன்போடு அணி திரண்டு கண்டு களித்தனர் .

இவ்வாலய வருடாந்த மகோற்சவம் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத் திருவெம்பாவை காலத்தில் திருவாதிரை நட்சத்திர நன்னாளைத் தீர்த்த உற்சவமாகக் கொண்டு இடம்பெறுவதும் இவ்வாலயத்துக்கே உரிய தனித்துவச் சிறப்பு .

பழமையும் ,பெருமையும் வாய்ந்த இவ்வாலயம் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண போர்ச் சூழல் காரணமாக முற்றாக இடிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஆலயம் அமைக்கப்பட்டுப் படிப்படியாக வளர்ச்சி வருவதும் அம்பாளின் திருவருளே அன்றி வேறில்லை .

 

நன்றி - செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :-செ .ரவிசாந்.